search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்ட்ரல் ரெயில் நிலையம்"

    • கடந்த வாரம் 11 பேர் மேற்கு வங்காளத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்தனர்.
    • விவசாய வேலைக்காக வந்த அவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை.

    சென்னை:

    வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு கூலி வேலைகளில் ஈடுபட்டு வரும் வட மாநிலத்தவர்கள் சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் 11 பேர் மேற்கு வங்காளத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்தனர்.

    பொன்னேரி பகுதியில் விவசாய வேலைக்காக வந்த அவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் சொந்த ஊர் செல்ல முடிவு செய்தனர். 2 நாட்களாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தங்கி இருந்தனர்.

    உணவு சாப்பிடாமல் இருந்த அவர்கள் மயக்க நிலையில் இருந்துள்ளனர். மேற்கு வங்காளத்திற்கு திரும்பி செல்ல காத்திருந்த 10 பேர்களில் 4 பேர் மயக்கம் அடைந்தனர்.

    பசியின் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு மயங்கி இருந்த நிலையில் அவர்களை சென்ட்ரல் நிலையத்தில் உள்ள அவசர உதவி மையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். அதனை தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சென்ட்ரல் ரெயில்வே போலீசார் வடமா நிலத்தவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • தரவரிசை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும்.
    • கடந்த நிதியாண்டை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள், புறநகா் ரெயில் நிலையங்களுக்கான தரவரிசை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும்.

    முன்னதாக 2017-18 நிதியாண்டில் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு ரெயில்வே வாரியம் ரெயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.


    இது குறித்து ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் ரெயில் நிலையங்கள் அனைத்தும் கடந்த நிதியாண்டை (2023-24) அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப் பட்டுள்ளன. இதில் 5,945 புறநகா் அல்லாத ரெயில் நிலையங்கள், 578 புறநகா் ரெயில் நிலையங்கள், 2,286 ஹால்ட் ரெயில் நிலையங்கள் என 8,809 ரெயில் நிலையங்கள் மூலம் பயணிகள் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகின்றன.

    இதில் புறநகா் அல்லாத ரெயில் நிலையங்கள் 6 தரங்களிலும், புறநகா் ரெயில் நிலையங்கள் மற்றும் ஹால்ட் ரெயில் நிலையங்கள் 3 தரத்திலும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் புறநகா் அல்லாத ரெயில் நிலை யங்களில் முதல் தரத்தில் 28, 2-ம் தரத்தில் 113, 3-ம் தரத்தில் 307, 4-ம் தரத்தில் 335, 5-ம் தரத்தில் 1,063, 6-ம் தரத்தில் 4,099 ரெயில் நிலையங்கள் உள்ளன.

    இதில் புதுடெல்லி ரெயில் நிலையம் கடந்த நிதியாண்டில் 3.93 கோடி பயணிகளை கையாண்டு ரூ.3,337 கோடி வருவாய் ஈட்டி முதல் இடத்தில் உள்ளது. தொடா்ந்து ரூ.1,692 கோடி வருவாய் ஈட்டி அவுரா ரெயில் நிலையம் இரண்டாம் இடத்திலும், ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

    தொடா்ந்து முதல் பட்டியலில் தெற்கு ரெயில்வேயின் சென்னை எழும்பூா், தாம்பரம் ரெயில் நிலையங்கள் உள்ளன.

    அதுபோல் புறநகா் ரெயில் நிலையங்களுக்கான பட்டியலில் மும்பை ரெயில் நிலையங்கள் முதல் இடத்திலும், சென்னை புறநகா் ரெயில் நிலையங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

    புறநகா் அல்லாத ரெயில் நிலையங்களுக்கான பட்டியலில் முதல் 4 தரவரிசைக்குள் வரும் ரெயில் நிலையங்களுக்கு நீண்டகால தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப் படுத்தப்படும்.

    அதன்படி, எளிதாக ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வசதி, குறைந்தபட்சம் இரு வாகனநிறுத்தும் வசதி, வாகன நிறுத்தத்தில் இருந்து ரெயில் நிலையத்தை எளிதாக அடையும் வசதி, குடிநீா் மற்றும் கழிப்பறை வசதி, தகவல் மையம், நடைமேடையை எளிதாக கடக்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும்.

    மேலும், முதல் தரத்தில் இருக்கும் ரெயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கான சக்கர நாற்காலி அல்லது பேட்டரி வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • கருவி குறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் ரெயில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நகரின் முக்கிய ரெயில் நிலையங்களான சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ரெயில்வே நிர்வாகம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியுடன் இணைந்து, சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இதய பிரச்சனைக்கு முதலுதவி சிகிச்சை செய்வதற்கான நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 4-ல் உள்ள நிலைய கண்காணிப்பு அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் இந்த கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல, சென்டிரல் ரெயில் நிலையத்தில் 7 இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது.

    தானியங்கி வெளிப்புற டிபி பிரிலேட்டர் (ஏ.இ.டி.) என்று அழைக்கப்படும் இந்த கருவி, ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிக்கு திடீரென இதய துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அவரின் இதய துடிப்பை சரிசெய்து, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக அளிக்கப்பட வேண்டிய முதலுதவி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, 'இந்த கருவியை முதல்கட்டமாக சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் வைத்துள்ளோம்.

    இதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதற்காக ரெயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கருவி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என்றார்.

    • மெமு சிறப்பு ரெயில் இன்று திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும்.
    • மின்சார ரெயில் நாளை மற்றும் 24-ந்தேதிகளில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும்.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரெயில் இன்று (21-ந் தேதி) வரை திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் நாளை மற்றும் 24-ந் தேதிகளிலும் இந்த மாற்றம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதுபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9.10, 11 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் மற்றும் திருத்தணிக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் 24-ந் தேதிகளில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும்.

    மறுமாா்க்கமாக அரக்கோணத்தில் இருந்து காலை 11.15, பகல் 12 மணிக்கும், திருத்தணியில் இருந்து பகல் 12.35 மணிக்கும் புறப்பட வேண்டிய மின்சார ரெயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்தடையும்.

    வேலூா் கன்டோன்மன்டில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சித்தேரி வரை மட்டும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.
    • தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.

    தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது. விபத்து காரணமாக மற்றொரு தண்டவாளத்தில் விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தண்டவாளத்தை சீரமைத்து, ரெயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • வடமாநிலங்களில் இருந்து வரும் ஏழு ரெயில்கள் திருத்தணியில் நிறுத்தப்படும்.
    • சென்ட்ரலில் இருந்து புறப்படும் சில ரெயில்கள் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை நகரை வெள்ளம் சூழ்ந்தது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துவிட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் பகுதிகளில் தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீர இன்னும் வடியவில்லை. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் இயக்க முடியாத நிலை 4-வது நாளாக நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு குறித்து ரெயில் நிலையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    1. மைசூருவில் இருந்து நேற்று புறப்பட்ட காவிரி எக்ஸ்பிரஸ் பெரம்பூரில் நிறுத்தப்படும்.

    2. மும்பையில் இருந்து சென்ட்ரலுக்கு புறப்பட்ட ரெயில் திருத்தணியில் நிறுத்தப்படும்.

    3. டெல்லியில் இருந்து புறப்பட்ட ரெயில் திருத்தணியில் நிறுத்தப்படும்.

    4. மொத்தம் ஏழு ரெயில்கள் திருத்தணி, சென்னை கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்பட உள்ளது.

    5. சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை புறப்படும் வந்தே பாரத் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    6. ஷாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலும் கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    • சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டது.
    • கடத்தப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் 4 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்.

    சென்னை:

    ஒடிசா மாநிலம், காந்தமால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் லங்கேஷ்வர். இவரது மனைவி நந்தினி கன்ஹார். இவர்களது ஒரு வயது ஆண் குழந்தை ஆயூஸ். நேற்று இரவு லங்கேஷ்வர் குடும்பத்துடன் சொந்த ஊரில் இருந்து ரெயில் மூலம் சென்டரல் ரெயில் நிலையம் வந்தடைந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் அவர்கள் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்து விட்டு அங்கேயே தூங்கினர்.

    அதிகாலை 2.45 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகன் ஆயூஸ் மாயமாகி இருப்பதை கண்டு லங்கேஷ்வரும், அவரது மனைவி நந்தினி கன்ஹாரும் அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் நிலையம் முழுவதும் தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியாததால் சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகள் முழுவதையும் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் குழந்தை ஆயூசை கடத்திச் செல்வது தெரியவந்தது. மேலும் அவர்கள் குழந்தையுடன் வால்டாக்ஸ் சாலையில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து அதனை ஓட்டிச்சென்ற டிரைவரைப் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் குழந்தையுடன் வந்த ஆணையும், பெண்ணையும் குன்றத்தூர் ஏரிக்கரை அருகே ஒரு வீட்டில் இறக்கிவிட்டதாக தெரிவித்தார்.

    உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்று ஏரிக்கரை பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்தபோது அங்கு குழந்தை ஆயூஸ் பத்திரமாக இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையை போலீசார் மீட்டனர்.

    மேலும் குழந்தையைக் கடத்தி வந்த தம்பதியான பரபாஸ் மண்டல், அவரது மனைவி நமிதா ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள் இங்கு தங்கி தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். குழந்தை இல்லாததால் அவர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    முதலில் போலீசார் பரபாஸ் மண்டலிடம் விசாரித்தபோது மனைவியை சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ரெயிலில் ஏற்றி விட வந்ததாக தெரிவித்தார். அவரிடம் சோதனை செய்தபோது ரெயிலுக்கான எந்த டிக்கெட்டும் இல்லை. நடைமேடை டிக்கெட் மட்டும் எடுத்து வந்து இருந்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பின்னர் அவர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அதிகமான வடமாநிலத்தவர்கள் வந்து செல்வார்கள் என்பதால் அங்கு குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் திட்டமிட்டு குழந்தை கடத்தலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் ரெயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர். அவர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர். மீட்கப்பட்ட குழந்தை அயூசை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தபோது அவர்கள் கண்ணீர் சிந்தி போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

    கைதான தம்பதி பரபாஸ் மண்டல், அவரது மனைவி நமிதா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் குழந்தை இல்லாததால் கடத்தலில் ஈடுபட்டனரா? அல்லது இதேபோல் வேறு இடத்தில் குழந்தை கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாலிபர் நாசரின் செல்போனை திருடிவிட்டு தப்ப முயன்றார்.
    • ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சென்னை:

    விழுப்புரத்தை சேர்ந்த நாசர் இப்ராகிம் (46) என்பவர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நின்றார். அப்போது ஒடிசாவை சேர்ந்த பாரத் நாயக் (24) என்ற வாலிபர் நாசரின் செல்போனை திருடிவிட்டு தப்ப முயன்றார்.

    அவரை சகபயணிகள் விரட்டி பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் ஒப்படைத்தனர். அப்போது பாக்கெட்டில் இருந்த பிளேடால் பாரத் கழுத்தில் கீறிக் கொண்டார். லேசான காயம் அடைந்த அவருக்கு முதலுதவி அளித்து விசாரித்தனர்.

    இந்த நிலையில் கழிவறை உள்ளே சென்ற பாரத், ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    • வெடிகுண்டு நிபுணர்கள் தீயணைப்பு துறை வீரர்கள் ரெயில் நிலையம் முழுவதும் சோதனையிட்டனர்.
    • வியாசர்பாடிக்கு விரைந்துள்ள போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொள்வார்கள்.

    சென்னை:

    சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று காலை 7.15 மணிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் 8 மணியளவில் குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு தொடர்பை துண்டித்து உள்ளார்.

    இதனையடுத்து உடனடியாக ரெயில்வே போலீசாருக்கும், பெருநகர காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீயணைப்பு துறை வீரர்கள் ரெயில் நிலையம் முழுவதும் சோதனையிட்டனர்.

    பின்பு பூக்கடை போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி மற்றும் ஜூன் 21-ந்தேதி இதே போன்ற மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் மணிகண்டன் என்பவர் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாகவும் அவரை போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை விடுவித்ததாகவும் மீண்டும் அதே நபர் இன்று தொடர்பு கொண்டு இரண்டு மணிக்கு குண்டு வெடிக்கும் என தெரிவித்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    வியாசர்பாடிக்கு விரைந்துள்ள போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொள்வார்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் மீண்டும் எச்சரித்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க பெற்றோரிடம் அறிவுறுத்தவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மூன்றாவது முறையாக அதே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தொடர்ச்சியாக சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

    இருந்த போதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே இருப்பு பாதை மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்ப நாய்களை கொண்டு சோதனைகளை மேற்கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
    • மர்ம நபர் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், பூக்கடை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் இன்று மதியம் 2 மணிக்கு குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

    மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், இருப்பு பாதை போலீசார், பூக்கடை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த ஏப்.25-ம் தேதி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த, அதே தொலைபேசி எண்ணில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளது.

    மாநில கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சென்ட்ரல் நிலையத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளை இது கவர்ந்து வருகிறது.
    • ரெயில் பெட்டி அருகே நின்று ‘செல்பி’ புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகரின் முக்கிய அடையாளமாக சென்ட்ரல் ரெயில் நிலையம் திகழ்கிறது. இங்கு பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

    சென்ட்ரலில் மெட்ரோ, மின்சார ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் அனைத்தும் உள்ளன. இங்கு வரும் பயணிகளுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட சென்ட்ரல் சதுக்கம் பயணிகளிடம் வரவேற்பு பெற்று உள்ளது. நடைபாதைகள், ஓய்வு இருக்கைகள், சுரங்க நடைபாதைகள், புல்வெளிகள் ஆகிய பல்வேறு வசதிகளை பயணிகள் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகளை கவரும் வகையில் மின்சார ரெயில் பெட்டி ஒன்று பயணிகள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது. சென்ட்ரல் விரைவு ரெயில் நிலையம் மற்றும் புறநகர் மின்சார ரெயில் நிலையங்களுக்கு இடையே திறந்த வெளியில் தண்டவாளம் அமைத்து அதன் மேல் இந்த மின்சார ரெயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சென்ட்ரல் நிலையத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளை இது கவர்ந்து வருகிறது. ரெயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆர்வத்துடன் இதனை பார்த்து செல்கிறார்கள். சிலர் ரெயில் பெட்டி அருகே நின்று 'செல்பி' புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    • தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு இருந்து வடமாநிலங்கள் உள்ளிட்ட பல முக்கிய மாநகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையம் இரவு , பகல் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகிறார்கள்.

    தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி விட்டன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பயணிகள் பல்வேறு புகார்கள் தெரிவித்து வருகின்றனர். ரெயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு உடனடியாக நாய் தொல்லையில் இருந்து விடுபட ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×